search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜா புயல். புதுக்கோட்டை மாவட்டம்"

    கோரதாண்டவமாடிய கஜா புயலால் மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கி நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் தனித்தீவாக காட்சியளிக்கிறது. #GajaCyclone
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கோரதாண்டவமாடிய கஜா புயலுக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். மின்கம்பங்கள் சாய்ந்து இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. தகவல் தொடர்பு துண்டிப்பால் புதுக்கோட்டை மாவட்டம் தனித்தீவாக மாறியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தை புரட்டி போட்ட கஜா புயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில கிடப்பதால் மாவட்டம் முழுவதிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது. மரங்கள் வீடுகளில் சாய்ந்ததால் 100க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மின்சாரம், வருவாய், காவல்துறையினர் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை நகர்ப் பகுதியில் பலத்த மழை பெய்ததன் காரணமாக பல்வேறு வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் வீடுகளில் குடியிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.பலத்த காற்று வீசியதால் வீட்டின் மேல்பகுதியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டிகளும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர்.

    கறம்பக்குடி, கந்தர்வக்கோட்டை, ஆலங்குடி, வடகாடு, மாங்காடு , கொத்தமங்கலம்,கீரமங்கலம், அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மா, பலா, வாழை, கரும்பு, காய்கறி பயிர்கள் மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன.

    திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமணப்பட்டியில் உள்ள சுங்கச்சாவடி கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளானது. சுங்கச்சாவடியின் மேற்கூரைகள் அனைத்தும் காற்றில் அடித்து செல்லப்பட்டன. கணினி, மின்சார வயர்கள், மின் கம்பங்கள் சரிந்து கடும் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    ஜெகதாப்பட்டினம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளன. கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட 60விசைப் படகுகள் என்னஆனது என தெரியவில்லை. அதனை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கட்டுமாவடி, முத்துக்குடா, மணமேல்குடி, ஆவுடையார் கோவில், பிள்ளையார் திடல், அந்தோணியார்புரம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி உள்ளிட்ட முகாம்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக தங்க வைக்கப்பட்டு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாவல் ஏரி பகுதியில் குடிசை வீட்டில் இருந்த 27 நரிக்குறவர் குடும்பங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் மாவட்டம் முழுவதும் சேத மதிப்பு கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதோடு, மின்கம்பங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் சீரமைப்பு பணியும்தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு துரிதப்படுத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்களும் செய்து வருகின்றனர். அறந்தாங்கி பகுதியில் சேதமான பகுதிகளை சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். #GajaCyclone
    ×